குடும்பங்களின் பாசம், பகை கூடிய உணர்வு பூர்வ கதை...
மேட்டுப்பட்டி கிராமத்தில் வசிக்கும் அண்ணன் தம்பிகள் ஜி.எம். குமார், மணி வண்ணன். இருவருக்கும் குடும்ப சொத்தை பிரிப்பதில் பகை.அண்ணனுடன் தகராறு வேண்டாம் என மணி வண்ணன் ஒதுங்கி வாழ்கிறார். இருவரின் மகன்களும் அவ்வப்போது அடித்துக் கொள்கிறார்கள்.
மணிவண்ணன் கடைசி மகன் தருண்கோபி மேல் அண்ணன்களுக்கு அளவு கடந்த பாசம். அவருக்கும் சக மாணவி பூங்கொடிக்கும் காதல். இடையில் மணி வண்ணன் மின்சாரத்தில் அடிபட்டு சாக தருண் கோபி நிர்கதியாகிறார். அண்ணன் மனைவிகள் சாப்பாடு போடாமல் ஒதுக்குகின்றனர். காதலியும் பிரிகிறாள். கிளைமாக்சில் அத்தை மகளை மணக்க முடிவு செய்கிறார். இதனால் குமார் மகன்களுடன் சண்டை வலுக்கிறது. குடும்பத்தினர் சேர்ந்தார்களா என்பது கிளைமாக்ஸ்.
கிராமத்தின் உயிரோட்டமான கேரக்டர்களை உணர்வு பூர்வமாக செதுக்கி திரையில் வடித்துள்ளார் இயக்குனர் ராசு மதுரவன்.
மணிவண்ணன், மகன்களாக பாசப்பிள்ளைகளாக வரும் பொன்வண்ணன், சீமான், ஜெகன்நாத், தருண்கோபி மனதில் நிற்கின்றனர். வலிய சண்டைக்கு வரும் பெரியப்பா குடும்பத்தினரை எதிர்க்கும் போதும், அன்பான குடும்பம் நடத்தும் போதும் மனதில் இறங்குகின்றனர்.
தருண் கோபி நடிப்பில் ஸ்கோர் பண்ணுகிறார். பூங்கொடியுடன் காதல் வயப்படுவது கிராமிய கவிதை... அப்பா இறந்ததும் பிரிவு தாங்காமல் அழுது தியேட்டரையே அழ வைக்கிறார். மதினிகள் சித்ரவதையை குடும்ப ஒற்றுமைக்காக தாங்கிக் கொண்டு தனியாக சமைத்து சாப்பிடுகையில் மனதை பிழிகிறார்.
காதலியை தேடி போவது, அவள் தனது வீட்டுக்கு வரும் போது பழைய சினிமா பாடலை போட்டு வரவேற்பது கலகலப்பு. பெரியப்பா மகன்களுடன் சண்டையிடுவதில் வேகம்.. கிளைமாக்சில் பகையாளி என பாராமல் எங்களுக்கு நீங்கதான் பெரியப்பா ஆதரவு என ஜி.எம்.குமார் காலில் விழுந்து அழுது குடும்பத்தை ஒன்று சேர்த்து விழிகளில் நீர் முட்ட வைக்கிறார்.
அண்ணன்களாக வரும் சீமான், பொன்வண்ணன் தம்பியை வெறுக்கும் மனைவிகளுக்கு அறைவிடுவது, தருண் கோபி சமைத்த உணவை சாப்பிடுவது சகோதர பாசத்தின் உச்சம்.
காதல் தோல்வியில் வசந்த ஊஞ்சலிலே பாடல் போட்டு சோகம் காட்டும் ஜெகன்நாத், சாப்பாட்டு ராமனாகவும் அப்பா நீ செத்த பிறகு இந்த செருப்பும் கட்டிலும் எனக்குத்தான் எனவும் சொல்லி குழந்தைத்தனமாக வலம் வரும் சிங்கம்புலி, தருண்கோபியை உயர்படிப்பு படிக்க வைக்க ஏங்கும் மணி வண்ணன், சதா முறைப்பு காட்டி திரியும் ஜி.எம்.குமார் ரவிமரியா, நந்தா பெரியசாமி போன்றோர் கேரக்டர்களும் அழுத்தம் பதிக்கின்றன. அக்காள் வீட்டில் தின்ன வந்துட்டான் என முணு முணுக்கும் ராஜ்கபூர் வார்த்தையில் இடிந்து போய் ஐம்பதாயிரம் ரூபாய் மொய் எழுதி விட்டு தருண் கோபி கோபமாக திரும்புவதும் அவரின் பாசத்தில் நெகிழ்ந்து தம்பி தம்பி என நெஞ்சில் அடித்துக்கொண்டு ஓடி வரும் அக்காவும் மனதை விட்டு அகலாதவை.
_RL0001.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக